ராமநத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் பலி
ராமநத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிாிழந்தனா்.
ராமநத்தம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தை பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் மகன் அர்னால்டு (வயது 18). இவர் தனது நண்பரான டி.கீரனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சேக்குவாரன் (18) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு சொந்த வேலையை முடித்து விட்டு ராமநத்தம் நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை அர்னால்டு ஓட்டினார்.
ராமநத்தம் அடுத்த வாகையூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளிக்கூட பஸ்சை அர்னால்டு முந்தி செல்ல முயன்றார்.
2 பேர் பலி
அப்போது எதிரே பெண்ணாடம் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அர்னால்டும், சேக்குவாரனும் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அர்னால்டு பரிதாபமாக உயிரிழந்தார். சேக்குவாரனுக்கு பெரம்பலூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேக்குவாரன் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.