பூந்தமல்லியில் கன்டெய்னர் லாரியில் மோதி கார் தீப்பிடித்தது; பெண் என்ஜினீயர் உயிர் தப்பினார்


பூந்தமல்லியில் கன்டெய்னர் லாரியில் மோதி கார் தீப்பிடித்தது; பெண் என்ஜினீயர் உயிர் தப்பினார்
x

பூந்தமல்லியில் கன்டெய்னர் லாரியில் மோதி கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் பெண் என்ஜினீயர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காஞ்சிபுரம்

பெண் என்ஜினீயர்

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் கிருத்திகா (வயது 23). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று காலை தனது நண்பர்களுடன் ஒரு நாள் சுற்றுலா செல்வதற்காக முடிவு செய்தார்.

இதற்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது நண்பர்களை உடன் அழைத்து செல்வதற்காக நேற்று அதிகாலையில் தனது வீட்டில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தார். காரை கிருத்திகாவே ஓட்டினார்.

கார் தீப்பிடித்தது

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை ஓரம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி நொறுங்கியதுடன், மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருத்திகா, அலறியபடி காரில் இருந்து இறங்க முயன்றார். ஆனால் காரின் கதவை திறக்க முடியாததால் வெளியே வரமுடியாமல் தவித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காரின் கதவை திறந்து கிருத்திகாவை பத்திரமாக மீட்டனர். அதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் கன்டெய்னர் பெட்டியின் பின்பகுதியும், லாரியின் பின்பக்க டயர்களும் தீப்பிடித்து எரிந்தது.

தீயை அணைத்தனர்

இது குறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. கன்டெய்னர் பெட்டியின் பின்பகுதியும், லாரியின் பின்புறம் உள்ள டயர்களும் தீயில் எரிந்து சேதமானது.

விபத்து ஏற்பட்டதும் கன்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாசினி தலைமையிலான போலீசார் தீயில் எரிந்து கிடந்த காரை அங்கிருந்து சாலையோரமாக அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் என்ஜினீயர் கிருத்திகாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

கன்டெய்னரில் என்ன உள்ளது?

விபத்துக்குள்ளான லாரியில் இருந்த கன்டெய்னர் பெட்டி தீப்பிடித்து எரிந்ததால் அதில் உள்ள பொருட்கள் பாதிக்கப்பட்டு உள்ளதா? என்பது தெரியவில்லை. வழக்கமாக கன்டெய்னர் பெட்டிகளை பின்புறமாக திறக்கும் வகையில்தான் லாரியில் ஏற்றுவார்கள்.

ஆனால் இந்த லாரியில் இருந்த கன்டெய்னர் பெட்டி டிரைவருக்கு பின்பகுதியில் திறக்கும் வகையில் இருந்தது. விபத்து நடந்த உடன் டிரைவரும் தப்பி ஓடிவிட்டதால் அதில் என்ன பொருட்கள் உள்ளது? என்பது தெரியவில்லை. தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களும் கன்டெய்னர் பெட்டியை திறந்து பார்க்கவில்லை என தெரிகிறது.

இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story