காரில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது
பள்ளிபாளையம் காரில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்
குமாரபாளையம் பைபாஸ் ரோட்டில் நேற்று மாலை நடந்து சென்ற முதியவர் மீது கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. விபத்து குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார், பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பள்ளிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 வாலிபர்கள் இருந்தனர். பின்னர் அவர்களை பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து, காரை சோதனை இட்டனர். காரில் தலையணைக்குள் அரை கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலத்தை வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை செய்த போது வெப்படை அடுத்த பாதைரையை சேர்ந்த கவின் (வயது 25) என்பதும், பிரகாஷ் (21), பலராமன் (25) இருவரும் ஈரோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.