கரும்பு நிலுவைத்தொகை வழங்க வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்


கரும்பு நிலுவைத்தொகை வழங்க வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்
x

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி கரும்பு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி கரும்பு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) குமரன் தலைமையில் நடந்தது.

தாசில்தார் சக்கரை, வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் அமுல்சேவியர் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

சாத்தனூர் அணைநீர் திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் கால்வாயை மாற்றி அமைத்து நந்தன் கால்வாயில் நீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தாழ்வாக உள்ள மின் ஒயர்களை சரிசெய்ய வேண்டும்.

சின்னஓலைப்பாடி வயல்வெளி பாதையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும். வயலூர் அருகே கள்ளு விற்கின்றனர். அதில், போதை மாத்திரை கலந்துவிற்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வைப்பூரில் மின்மாற்றிகள் பழுதடைந்து உள்ளதை சரிசெய்ய வேண்டும் அல்லது புதிதாக மின்மாற்றி அமைக்க வேண்டும்.

கரும்பு நிலுவைத்தொகை

ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு உள்ளதை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்ட வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை வழங்க பதிவு செய்த ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நந்தன் கால்வாய் திட்டம் சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுமை வீடு திட்டத்தில் 3-ம் தவணை நிதி வழங்குவதில் சிக்கல் உள்ளதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி கரும்பு நிலுவைத்தொகை வழங்க வேண்டும். வேளாண் இடுபொருட்கள் மானிய தொகை அதிகமாக உள்ளதை குறைக்க நடவடிக்கை தேவை. கரும்பு அறுவடைக்கூலி ஒரு டன்னுக்கு ரூ.960 உள்ளதை குறைக்க வேண்டும்.

குடிநீர் கிணறுகள் தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் விநியோகிக்கும் பொருட்கள் அனைத்தும் ஒரே நாளில் கிடைக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை வைத்து பேசினர்.

தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்தனர்.

இதில், விவசாய சங்க பிரதிநிதிகள் பழனிச்சாமி, சதாசிவம், மணிகண்டன், கிருஷ்ணன், வரதராஜன், பாரதியார், ஏழுமலை, கேசவன், துரைராஜ் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story