தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்


தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்
x
தினத்தந்தி 25 March 2024 6:31 AM IST (Updated: 25 March 2024 12:04 PM IST)
t-max-icont-min-icon

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27-ந்தேதி ஆகும். 28-ந்தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். மற்ற தலைவர்களும் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். இதையடுத்து தமிழக நாடாளுமன்ற தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலின்போது அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.அதன்படி வேட்புமனுக்கள் 20-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வேலை நாட்களில் தினமும் காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை மட்டும் பெறப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளர்கள் அளிக்கும் சுய உறுதிமொழி ஆவணத்தில் தங்களது சமூக வலைதள கணக்கு விவரங்களை (பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்) அளிக்கவேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் அளிக்கப்படும் அரசியல் விளம்பரங்களை முன் அனுமதி பெற்று பிரசுரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு போன்றவற்றில் மும்முரமாக இருந்ததால், ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27-ந்தேதி ஆகும். மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பாதுகாப்பு கருதி வழக்கத்தை விட அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 28-ந்தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் திரும்பப்பெற 29-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story