காலாண்டு வரி செலுத்தாத 147 வாகனங்களின் உரிமம் ரத்து:கலெக்டர் உத்தரவு


காலாண்டு வரி செலுத்தாத 147 வாகனங்களின் உரிமம் ரத்து:கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காலாண்டு வரி செலுத்தாத 147 வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

தேனி

காலாண்டு வரி

பஸ், ஆம்னி பஸ், சுற்றுலா வாகனங்கள், பள்ளி வாகனங்கள், வேன்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு காலாண்டும் வரி செலுத்த வேண்டும். ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரையிலான காலகட்டம் முதல் காலாண்டு ஆகும். ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டம் இரண்டாவது காலாண்டு ஆகும்.

2-வது காலாண்டு வரி செலுத்த கடந்த 15-ந்தேதி கடைசி நாள். அதன்பிறகு அபராதத்துடன் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தாமல் இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தினார். அதன்பேரில் மாவட்டத்தில் பல இடங்களில் வாகன தணிக்கை செய்யப்பட்டது. அப்போது காலாண்டு வரி செலுத்தாத 117 சரக்கு வாகனங்கள், 28 வேன்கள், 2 பள்ளி வாகனங்கள் என மொத்தம் 147 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உரிமம் ரத்து

இந்த வாகனங்களின் மீது மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கலெக்டருக்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் மூலமாக பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில், 147 வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே காலாண்டு வரி செலுத்தாத வாகனங்களை சாலையில் இயக்கக்கூடாது. அவ்வாறு இயக்குவது தெரியவந்தால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வரி செலுத்தாத வாகனங்களின் உரிமையாளர்கள் அபராதத்துடன் வரியை தாமதமின்றி செலுத்த வேண்டும். இந்த தகவலை தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் தெரிவித்தார்.


Related Tags :
Next Story