கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில்சேவை ரத்து:திக்குமுக்காடி போன ரெயில் பயணிகள்


கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில்சேவை ரத்து:திக்குமுக்காடி போன ரெயில் பயணிகள்
x

சென்னையில் கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதால், ரெயில் பயணிகள் திக்குமுக்காடி போனார்கள். இதனால் பஸ்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் சாரை சாரையாக ஏறி புறப்பட்டு சென்றனர்.

சென்னை

சென்னை,

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே ரூ.279 கோடி மதிப்பீட்டில் 4-வது புதிய ரெயில் பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், ரெயில் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு அறிவிப்பை ரெயில்வே நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது.

கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையேயான மின்சார ரெயில் சேவை ஆகஸ்டு 27-ந்தேதி (நேற்று முன்தினம்) முதல் அடுத்த 7 மாதங்களுக்கு நிறுத்தப்படும் என்ற அறிவிப்புதான் அது. இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இதனால் வேளச்சேரியில் இருந்து புறப்பட்ட பறக்கும் மின்சார ரெயில்கள் அனைத்தும் சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்பட்டன.

அதேபோல கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் அனைத்துமே கடற்கரை வரை மட்டுமே இயக்கப்பட்டன.

குறிப்பாக வேளச்சேரி - கடற்கரை இடையே தினசரி 122 பறக்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. அதாவது 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என்ற அடிப்படையில், மொத்தம் 80 பறக்கும் மின்சார ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் சிரமப்பட்டுதான் போனார்கள். விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் பயணிகளின் சிரமம் பெரியளவில் எதிரொலிக்கவில்லை.

ஆனால் நேற்று ரெயில்வே நிர்வாகத்தை ஆசைதீர திட்டித்தீர்க்கும் அளவுக்கு, பயணிகள் பரிதவித்து போய்விட்டார்கள். இதுவரை ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையமாக மட்டுமே காணப்பட்டு வந்த சிந்தாதிரிப்பேட்டை நேற்று ரெயில் முனையமோ, என்று எண்ணும் அளவுக்கு பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களுக்கே 'டப்' கொடுக்கும் வகையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு மட்டுமே ரெயில்கள் வந்ததால், பயணிகள் முண்டியடித்து ஏறும் காட்சிகளையே பார்க்க முடிந்தது. நடை மேடைகளில் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்தது. ஒவ்வொரு ரெயிலும் கண்ணீர் வடிக்காத குறையில், பயணிகளை சுமந்து சென்றது. நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு பயணிகள் நெருக்கடிக்கு மத்தியில் பயணித்தனர்.

குறிப்பாக பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், குறிப்பிட்ட நேரத்துக்கு அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் மிகவும் பரிதவித்து போனார்கள். ரெயில்களில் முண்டியடித்து ஏறுகையில் சிலருக்கு சட்டைப்பைகளும், 'பேக்'குகளும், சாப்பாட்டு கூடைகளும் கிழிந்த சம்பவங்களும் அரங்கேறியது.

கூட்ட நெரிசலை பார்த்து பயந்த காய்கறி-பழ வியாபாரிகளும் நடைமேடையோடு தங்கள் சங்காத்தத்தை முடித்துக்கொண்டு நடையை கட்டினர்.

பயணிகள் தேவைக்காக சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து சென்டிரல், பிராட்வே நோக்கி கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் அண்ணா சாலை வழியாக பிராட்வே செல்லும் பஸ்கள் பெரும்பாலும் (சிம்சன் சிக்னல் இடதுபுறம் வழியாக) சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்து சென்றன. பஸ்களும் கூட்ட நெரிசலுடனேயே காணப்பட்டன. இதனால் பயணிகள் பரிதவித்து போனார்கள்.

அதேவேளை சூழ்நிலையை உணர்ந்து பல ஆட்டோக்கள் திடீர் ஷேர் ஆட்டோக்களாக மாறி, பயணிகளை கூவி கூவி அழைத்து சென்றதையும் பார்க்க முடிந்தது. சென்டிரலுக்கு செல்ல வேண்டிய பயணிகள் சிலர் நடந்து சென்றும் சென்டிரலை அடைந்தனர். பயணிகள் நடமாட்டமும், வாகனங்கள் நடமாட்டமும் அதிகம் இருந்ததால் சிந்தாதிரிப்பேட்டை பகுதி நேற்று வழக்கத்தை விட பரபரப்பாகவே காட்சி தந்தது.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையேயான மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது உண்மையிலேயே எங்களை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடற்கரைக்கும், சென்டிரலுக்கும் போக பஸ்களை நம்பித்தான் இருக்க வேண்டிய நிலை உள்ளது. கூட்ட நெரிசலுக்கு பயந்து பலரும் ஆட்டோக்களில் 'ஷேரிங்' முறையில் செல்கிறார்கள். வயதானவர்களும், பெண்களும் மிகவும் பாதிக்கிறார்கள். 'பீக் அவர்ஸ்' என்று கூறப்படும் நெரிசல் மிகுந்த நேரத்தில் மிகவும் அவதிப்பட்டு போனோம். எனவே அந்த நேரங்களிலாவது கூடுதலாக ரெயில்களை விடலாம்.

எழும்பூர் - கடற்கரை இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது நல்ல விஷயம்தான். எப்படி இருந்தாலும் இன்னும் 7 மாதங்கள் இந்த கஷ்டத்தை எதிர்கொண்டாக வேண்டும். ஆனால் கூடுதல் ரெயில்கள் இயக்கினால் கொஞ்சம் எங்கள் தவிப்பு குறையும். வேளச்சேரி - பரங்கிமலை ரெயில் நிலையங்கள் இணைப்பு பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த பணியை விரைவில் முடித்தாலாவது, இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.

சென்னை வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை நோக்கி ஒரு பறக்கும் மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் தரமணி வந்தபோது, அங்கு காத்திருந்த பயணிகள் கூட்டம் கூட்டமாக ஏறினர்.

பயணிகள் முண்டியடித்து ஏறியதில், நெரிசல் ஏற்பட்டது. அந்த சமயம் ரெயில் புறப்பட்டது. அப்போது படிக்கட்டில் நெரிசலுக்கிடையே மாட்டிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் அப்படியே சரிந்து நடைமேடையில் விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பயணிகள் சிலர் அவருக்கு முதலுதவி அளித்தனர். சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட மாணவி, அடுத்து வந்த ரெயிலில் ஒருவழியாக ஏறி புறப்பட்டு சென்றார்.


Next Story