தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்க டெண்டர் ரத்து: தா.பழூர் விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி


தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்க டெண்டர் ரத்து: தா.பழூர் விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
x

தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்க டெண்டர் ரத்து செய்யப்பட்டதை வரவேற்று தா.பழூர் விவசாயிகள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தனர்.

அரியலூர்

நிலக்கரி சுரங்கம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய 3 பகுதிகளில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

டெண்டர் ரத்து

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மைக்கேல் பட்டி நிலக்கரி திட்ட பகுதியான பருக்கள் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் மற்றும் டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மத்திய மந்திரி பிரகலாத ஜோஷி அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பருக்கள் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கிராமத்தின் முக்கிய பகுதியில் ஒன்று கூடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். ஒருசிலர் நிலக்கடலை செடியினை கையில் ஏந்தி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

விவசாயிகள் நிம்மதி

புகழேந்தி:- பருக்கள் கிராம விவசாயிகள் நிலக்கடலை, முந்திரி உள்ளிட்டவைகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். இங்குள்ள மக்களுக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவுமே தெரியாது. திடீரென நிலக்கரி சுரங்க அறிவிப்பு வெளியானதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திகைப்பில் ஆழ்ந்தனர். தற்போது மத்திய மந்திரி நிலக்கரி ஏல நடைமுறையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு விலக்கு அளித்து அறிவித்திருப்பது எங்கள் பகுதி விவசாயிகளுக்கு நிம்மதி ஏற்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சி அளிக்கிறது

சோமசுந்தரம்:- எங்கள் கிராமத்தில் நிலக்கரி திட்டத்திற்கு சுரங்கம் அமைக்க இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். கடந்த 3 நாட்களாக நிம்மதி இன்றி என்ன செய்வது என்று புலம்பிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு இந்த கிராமத்தை விட்டு வேறு எங்கு சென்றாலும் அது நிம்மதியை கொடுக்காது. தற்போது நிலக்கரி திட்ட ஏலத்தை தமிழகத்தில் விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்திருப்பது நிச்சயமாக எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

'தினத்தந்தி'க்கு நன்றி

தேவேந்திரன்:- நிலக்கரி திட்ட அறிவிப்பு வந்தது முதல் விவசாயிகளும், பொதுமக்களும் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விட்டதாகவே நினைத்தோம். அந்த சூழ்நிலையில் நிலக்கரி திட்ட எதிர்ப்பு குறித்து மக்களின் மனநிலையை பிரத்யேகமாக கட்டுரை வெளியிட்டு வெளிப்படுத்திய 'தினத்தந்தி' நாளிதழுக்கு முதலில் நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அதுபோல் எங்கள் பகுதியில் இருந்து நிலக்கரி எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த அனைவருக்கும் நாங்கள் நன்றி கடன் பட்டவர்களே. இப்போது உள்ள இந்த நிலை தற்காலிகமான நிம்மதியை கொடுத்தாலும் நிச்சயமாக எதிர்காலத்தில் எங்கள் பகுதியில் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உறுதிப்படுத்தும் பொழுது நிச்சயமாக அது எங்களுக்கு முழு மன நிறைவை கொடுக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story