18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து- சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து- சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 3 May 2024 3:10 PM IST (Updated: 3 May 2024 3:47 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றதாக சுட்டிக்காட்டி உள்ளனர். இதில் நான்கு பணியிடங்கள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும், மற்ற 14 பணியிடங்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளனர்.

எழுத்து தேர்வு நேர்முகத் தேர்வு நடைபெற்று ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதில் முறையான இன சுழற்சி முறை பின்பற்றி இட ஒதுக்கீடு வழங்காமல் பணி நியமனங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர் .குறிப்பாக அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட தேர்வாளர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆசிரியர் தேர்வாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் , எனவே உரிய இன சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், பணி நியமனங்கள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆர் மஞ்சுளா முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர் சங்கரன் ஆஜராகி, நியமனத்தில் முறையான இன சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை,அதிக மதிப்பெண் பெற்ற தகுதியுடைய பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தேர்வாளர்களுக்கு பொதுப்பிரிவில் இடம் வழங்கப்படவில்லை எனவே பட்டியலை ரத்து செய்ய வேண்டும் புதிய பட்டியலை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2020 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்..

4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story