தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? - மின்சார வாரியம் விளக்கம்


தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? - மின்சார வாரியம் விளக்கம்
x

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தி உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின்வாரியம் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது. இதேபோல், வீட்டுப் பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால், மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை. மேலும், வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் மூலமாக தெளிவுபடுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story