நீட் தேர்வு ரத்துதான் மாநில சுயாட்சிக்கான உண்மையான வெற்றி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


நீட் தேர்வு ரத்துதான் மாநில சுயாட்சிக்கான உண்மையான வெற்றி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

‘நீட் தேர்வு ரத்துதான் மாநில சுயாட்சிக்கான உண்மையான வெற்றி' என்றும், ‘இதற்காக ஒவ்வொருவரும் உதயநிதியாக மாறி போராடவேண்டும்' என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சனாதன ஒழிப்பு மாநாடு

சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நேற்று நடந்தது.மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

ஒரு உதயநிதி போதாது

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கவர்னரை கண்டித்து, மிகப்பெரிய ஒரு உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தினோம். நீட் தேர்வு போராட்டம் மிகப்பெரிய வெற்றி என்று எல்லோரும் சொல்கிறார்கள். எதிர்ப்பை தெரிவித்த விதத்தில் வெற்றிதான். ஆனால், என்றைக்கு நீட் தேர்வு முழுமையாக தமிழ்நாட்டில் இருந்து ரத்து செய்யப்படுகிறதோ அதுதான் உண்மையான வெற்றி.

தேர்தல் காலத்தில், பிரசாரத்தில் நான் வாக்குறுதி கொடுத்தேன். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் அதற்கான முழு முயற்சிகள் எடுக்கப்படும் என்று சொன்னேன். அதற்காக உண்மையாக நானும், நம்முடைய திராவிட மாடல் அரசும், முதல்-அமைச்சரும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றால் இந்த ஒரு உதயநிதி போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் உதயநிதியாக மாறி அந்த நீட் தேர்வு போராட்டத்திலே உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

உண்மையான வெற்றி

எப்பொழுது நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறதோ, அப்போதுதான் உண்மையான மாணவர்களுக்கான வெற்றி. மாநில சுயாட்சிக்கான அந்த வெற்றி. சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது.

எனவே நம்முடைய முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்தக்கூடிய வகையிலே அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம், பாடுபடுவோம். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் வெல்வோம் என்று உறுதி எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க நிர்வாகி மதுக்கூர் ராமலிங்கம், நடிகை ரோகிணி, ஆதவன் தீட்சண்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story