சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய21 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்துவட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை


சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய21 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்துவட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Sept 2023 12:30 AM IST (Updated: 7 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளில் கடந்த மாதம் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 21 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாக வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன் தெரிவித்து உள்ளார்.

37 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அதன் பகுதி அலுவலகமான பரமத்திவேலூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் கடந்த மாதம் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது 1,154 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 227 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. இதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் வரி செலுத்தாதது மற்றும் இதர குற்றங்களுக்காக 102 வாகன உரிமையாளர்களிடம் வரி ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 100 மற்றும் அபராதம் ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்து 700 வசூலிக்கப்பட்டது. மேலும் 125 வாகனங்களுக்கு ரூ.6 லட்சத்து 74 ஆயிரத்து 400 அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டது.

தகுதிச்சான்று, அனுமதி சீட்டு, ஓட்டுனர் உரிமம் முதலியவை நடப்பி இல்லாமலும், உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் உரிய அனுமதி பெறாமல் சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகை வாகனமாக பயன்படுத்தியது தொடர்பாக சோதனை செய்ததில் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓட்டுனர் உரிமம் ரத்து

அத்துடன் சுப்ரீம் கோர்ட்டு சாலைபாதுகாப்பு குழு உத்தரவின்படி சாலை பாதுகாப்பு விதிகளுக்கு மாறாக அதிவேகம், அதிகபாரம், அதிக உயரம் பாரம் ஏற்றுதல், தலைகவசம் அணியாதது, வாகனம் ஓட்டும் போது செல்போன் உபயோகித்தல், சீட்பெல்ட் அணியாதது, சிக்னல்களை முந்துதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக 21 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து (தகுதி இழப்பு) செய்யப்பட்டு உள்ளது. இது போல் சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story