'தினத்தந்தி' செய்தி எதிரொலி தென்கோவனூர் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக தென்கோவனூர் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டது.
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தென்கோவனூர் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டது.
தென்கோவனூர் பாசன வாய்க்கால்
கூத்தாநல்லூர் அருகே கோரையாறு என்ற இடத்தில் தென்கோவனூர் பாசன வாய்க்கால் உள்ளது. கோரையாற்றில் இருந்து வரும் தண்ணீர் தென்கோவனூர் பாசன வாய்க்கால் வழியாக விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலமாக தென்கோவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் நெல், உளுந்து, பயறு, பருத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தென்கோவனூர் பாசன வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர் காடாக காட்சி அளித்தது. இதனால், பாசன வாய்க்கால் வழியாக வயல்களுக்கு ஆற்று தண்ணீரை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.
'தினத்தந்தி' செய்தி எதிரொலி
கோரையாற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கூட, பாசன வாய்க்கால் வழியாக போதிய தண்ணீர் வராததால் பயிர்களை காப்பாற்ற பம்புசெட் வைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் சிரமம் அடைந்தனர். எனவே தென்கோவனூர் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி தென்கோவனூர் பாசன வாய்க்கால் தற்போது தூர்வாரப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.