தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தலாமா? அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் என்ன..?
இந்தியாவில் பொருளாதார குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக அமலாக்கப்பிரிவு இருக்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் பொருளாதார குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக அமலாக்கப்பிரிவு இருக்கிறது. இன்று நாட்டில் அதிகாரமிக்க அமைப்பாகவும் பார்க்கப்படுகிறது. சிபிஐ ஒரு மாநிலத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற சட்டவிதி உள்ளது. ஆனால் அமலாக்கப்பிரிவுக்கு அப்படியெல்லாம் ஒரு அனுமதி என்பது தேவையில்லை.
அமலாக்கத்துறை பி.எம்.எல்.ஏ. என்னும் கணக்கில் வராத கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதை தடுக்கும் சட்டம் 2002, பெமா எனப்படும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின்படியும் அதிகாரங்களை கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் பண மோசடி தொடர்பான எந்த வழக்கையும் விசாரிக்கலாம், சோதனையை நடத்தலாம். கைது செய்யலாம்.
இதில் கருப்பு பண தடுப்புச் சட்டம் அமலாக்கப்பிரிவுக்கு வழங்கும் அதிகாரத்திற்கு எதிராக 242 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தில் போதிய ஆதாரம் இல்லாமல் அதாவது அமலாக்கப்பிரிவின் முதல் தகவல் அறிக்கையான இசிஐஆர்-யை சம்பந்தப்பட்ட நபர்களிடம் அளிக்காமலே கைது செய்யலாம்; ஜாமீனில் வெளிவருவதற்கு கடுமையான சட்ட விதிகள் உள்ளன என மனு தாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
சட்ட விதிகள் அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலும் மீறுகிறது எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பிஎம்எல்ஏ போடப்படுவதாகவும் கூறப்பட்டது. அமலாக்கப்பிரிவு இதை மறுக்க, சுப்ரீம் கோர்ட்டு 2022 ஜூலை இதில் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. சட்டம் அமலாக்கப்பிரிவுக்கு வழங்கும் அனைத்து அதிகாரங்களையும் உறுதி செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இசிஐஆர்-யை வழங்குவது கட்டாயமில்லை, கைது செய்யும் போது காரணங்களை மட்டும் வெளிப்படுத்தினால் போதும் எனவும் உத்தரவிட்டது.
இப்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில் தலைமைச் செயலகத்தில் அமலாக்கப்பிரிவு சோதனையிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மூலம் தாக்குதல்களை தலைமை செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் செயல் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படி தலைமைச் செயலகத்தில் சோதனை என்பது தமிழகத்திற்கு புதிதல்ல. ஏற்கனவே 2016-ம் ஆண்டு தலைமை செயலாளராக இருந்த ராமமோகன்ராவ் அலுவலகத்துக்குள்ளேயே வருமான வரித்துறை சோதனையிட்டது.
அப்போதும் சரி, இப்போதும் சரி தலைமைச் செயலகத்திற்குள் மத்திய முகமைகள் சோதனைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இப்போது தலைமை செயலகத்தில் நுழைய அமலாக்கப்பிரிவுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. பி.எம்.எல்.ஏ. என்னும் கணக்கில் வராத கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதை தடுக்கும் சட்டத்தின் 17-வது சட்டப்பிரிவு விரிவான விளக்கத்தை கொடுக்கிறது. அதாவது பொருளாதார மோசடிக்கு முகாந்திரம் இருப்பவருக்கு சொந்தமான இடங்களிலும், அவரிடமும் சோதனையிட அமலாக்கப்பிரிவுக்கு அதிகாரம் வழங்குகிறது. இந்த அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்ததுள்ளது.
எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் சி.பி.ஐக்கான பொது ஒப்புதலை திரும்பப்பெறும் சூழலில், அமலாக்கப்பிரிவு ஏவிவிடப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு அமலாக்கப்பிரிவு அதிகாரத்தை உறுதி செய்தாலும் சத்தீஸ்கார் அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடியிருக்கிறது. அமலாக்கப்பிரிவு கட்டுப்படுத்தப்படாத அதிகாரங்களை கொண்டிருக்கிறது, இதனால் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை, துஷ்பிரயோகத்தையும் செய்கிறது என்ற சத்தீஸ்கார் அரசின் மனுவை ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.