போக்குவரத்து நெரிசல், விபத்துகள் தடுக்கப்படுமா?


போக்குவரத்து நெரிசல், விபத்துகள் தடுக்கப்படுமா?
x

போக்குவரத்து நெரிசல், விபத்துகள் தடுக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

போக்குவரத்து நெரிசல்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு முக்கிய சந்திப்பாக இருந்து வருகிறது. திருச்சி-சிதம்பரம், கும்பகோணம்-சென்னை சாலைகளில் கும்பகோணம், திருச்சி, சென்னை, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கனரக, இலகு ரக, இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள நான்கு ரோடு பகுதிக்கு வந்து செல்கின்றன. இதனால் முக்கிய சந்திப்பு பகுதியாக நான்கு ரோடு உள்ளது.

இங்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் எவ்விதமான நடவடிக்கையும் இல்லாததால் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்து ஏற்படுகிறது. இப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டபோதும், போதிய வெளிச்சம் இல்லை.

விபத்துகள்

மேலும் இந்த பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஸ்வீட் கடைக்குள் லாரி புகுந்தது. அதேபோல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று கடைக்குள் புகுந்தது. மேலும் லாரி ஒன்று கட்டுப்பாட்டை மீறி வேகமாக வந்து, அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் நின்ற போக்குவரத்து போலீசாரையும் இடிக்க வந்த சம்பவமும் நடந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழியாக சென்ற லாரி, தடுப்புக்கம்பிகள் மீது மோதியதோடு, அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் மோதுவதுபோல் சென்ற நிலையில், அவர் சுதாரித்துக் கொண்டு நகர்ந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் கழிந்தநிலையில் நான்கு ரோட்டில் கூட்டுறவு சங்கத்தின் ஓரமாக உள்ள தடுப்புச்சுவர் மீது வாகனம் மோதியது. இதுபோன்று பல்வேறு விபத்துகள் இப்பகுதியில் நடந்துள்ளன.

கோரிக்கை

தற்போதும் வாகன ஓட்டிகள் நான்கு திசைகளில் இருந்தும் வேகத்தை குறைக்காமல் அதிவேகமாக வந்து செல்கின்றனர். இதனால் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதியும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் விபத்துகளை தவிர்க்க நான்கு திசைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும். அதேபோல் நான்குரோடு சந்திப்பில் அதிக வெளிச்சத்துடன் கூடிய உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேகத்தடை

ெஜயங்கொண்டம் பகுதியை சேர்ந்த அன்பழகன்:- ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் தா.பழூர் சாலையில் மட்டும் ஒரே ஒரு வேகத்தடை உள்ளது. விருத்தாசலம் ரோடு, திருச்சி ரோடு, சிதம்பரம் ரோடு உள்ளிட்ட 3 திசைகளிலும் வேகத்தடை இல்லாததால், பல வாகனங்கள் வேகமாக வந்து விபத்துக்குள்ளாகும் சூழல் உள்ளது. எனவே தா.பழூர் சாலையில் உள்ளதுபோல் மற்ற 3 திசைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் நான்கு திசைகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து, சிக்னல்களை மதித்து, போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புறவழிச்சாலைகள்

நான்கு ரோட்டில் கடை வைத்துள்ள மனோகரன்:- ஜெயங்கொண்டம் நான்கு ரோடு போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான கனரக, இலகு ரக வாகனங்கள் இந்த வழியாக வந்து செல்கின்றன. ஒரு திசையில் இருந்து வாகனங்கள் வருவது மற்றொரு திசையில் இருந்து வருபவர்களுக்கு தெரியாத நிலையில், விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனங்களில் வேகமாக வருபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திகைத்து நிற்கும் நிலை உள்ளது. எனவே வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் திருச்சியில் இருந்து சிதம்பரம் ெசல்லும் புறவழிச்சாலை போன்றே, கல்லாத்தூர் மகிமைபுரம் வழியாக சின்னவளையம் புறவழிச்சாலையை இணைக்கும் வகையிலும், அதேபோல் கல்லாத்தூர் மகிமைபுரத்தில் இருந்து செங்குந்தபுரம் வழியாக திருச்சி சாலையில் இணைக்கும் வகையிலும் இரண்டு புறவழிச்சாலைகளை அமைத்தால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். இரண்டு திசைகளில் இருந்து வரும் வாகனங்களை எதிரெதிரே செல்ல போக்குவரத்து போலீசார் கூறுகின்றனர். அதற்கு பதிலாக ஒரு திசையில் இருந்து வருபவர்களை அனுப்பிய பின்னரே, மறு திசையில் இருந்து வருபவர்களை அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போக்குவரத்து நெருக்கடிைய தவிர்க்கலாம்.


Next Story