இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கலாமா? மாமல்லபுரம் புராதன சின்ன பகுதிகளில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு


இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கலாமா? மாமல்லபுரம் புராதன சின்ன பகுதிகளில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு
x

மாமல்லபுரம் புராதன சின்னங்களை மின் விளக்கு வெளிச்சத்தில் இரவு நேரத்தில் கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கலாமா? என்று புதுடெல்லியில் இருந்து வந்திருந்த தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் மின் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்த புராதன சின்ன பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள, புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்நாட்டு பயணிகள் தலா ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகள் தலா ரூ.600-ம் நுழைவு சீட்டு பெற்று தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கு வரும் பயணிகளுக்கு மின் விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்க இரவு நேர அனுமதி இல்லை. மாலை 6 மணிக்கு பிறகு வரும் பயணிகள் பலர் கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டைக்கல், அர்ஜுனன் தபசு மற்றும் ஐந்து ரதம் ஆகியவற்றை மின் விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் மாலை 6 மணிக்கு பிறகு மாமல்லபுரம் வருபவர்கள் புராதன சின்னங்களின் நுழைவு வாயில் கதவு வரை வந்து ஏமாற்றத்துடன் ஊர் திரும்பி செல்கின்றனர். அவர்கள் கம்பிவேலி அருகில் வெளியில் நின்று பார்த்துவிட்டு, மாமல்லபுரம் வந்த நினைவாக ஒரு புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு செல்வதை காண முடிகிறது.

இந்த நிலையில் புதுடெல்லி தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் பார்வையிட சுற்றுலா பயணிகளை அனுமதித்தால் புராதன சின்னங்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்குமா? புராதன சின்னங்கள் பகுதியில் சிற்பங்கள் ஜொலிக்கும் வகையில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் சரியாக எரிகிறதா? என ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்து தொல்லியல் துறை வட்டாரத்தில் கூறும்போது, மாமல்லபுரம் புராதன சின்னங்களை இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் சுற்றிப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.. தற்போது புதுடெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் இதகுறித்து ஆய்வு செய்துள்ளனர்.

இன்னும், ஓரிரு மாதங்களில் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story