குளத்தில் புதர் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா?
குளத்தில் புதர் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா?
திருமருகல் அருகே குளத்தில் புதர்மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமராமத்து திட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி கீழவீதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீழவீதியில் வண்ணான்குளம் உள்ளது. இந்த குளத்தை திருக்கண்ணபுரம் கீழவீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த குளம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலுக்கு எதிரில் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் வண்ணான்குளம் தூர்வாரி கரைப்பலப்படுத்தப்பட்டது.
ஆகாயத்தாமரை செடிகள்
இந்த குளத்தில் ஆகாயத்தாமரைசெடிகள் மற்றும் கொடிகள் மண்டி புதர் போல் காட்சியளிக்கிறது. குளத்தின் படிக்கட்டுகளும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. வண்ணான்குளத்தில் ஆகாயத்தாமரைகள் மண்டி கிடப்பதால், பொதுமக்கள் பக்கத்தில் உள்ள கோவில் குளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வண்ணான்குளத்தில் புதர் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி படிகட்டுகளை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.