கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
திருத்துறைப்பூண்டியில் கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
முப்போக சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி ஒரு பின் தங்கிய பகுதியாக உள்ளது. காரணம் முழுக்க முழுக்க விவசாயம் மட்டுமே இங்கு பிரதான தொழிலாக உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக நெல் சாகுபடி நடந்து தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இன்று விவசாய பணிகள் முழுமையாக செய்ய முடியாமல் விவசாயிகள் சொந்த ஊரை விட்டு, வெளி மாவட்டத்துக்கும், வெளி மாநிலத்திற்கும் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் கர்நாடகாவில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கவில்லை. அப்படியே திறந்தாலும் பயிர் கருதாக இருக்கும் நேரத்தில் தண்ணீர் இல்லாமல் போவது.
கோரையாறு
மேலும் பருவ மழை சரியாக பெய்யாமலும், அளவுக்கு அதிகமாக பருவமழை பெய்தாலும் பயிர்கள் அழுகி நாசமாகும் . இதனால் விவசாயம் முற்றிலும் அழிந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகள் தங்கள் நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் விவசாயம் செய்கின்றனர். இருந்த போதிலும் பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்யும் போது, மழை நீர் வயல்களில் தேங்கி பயிர்கள் அழுகும் நிலை ஏற்படுகிறது.
திருத்துறைப்பூண்டி பகுதிக்கு முக்கிய வடிகாலாக திகழக்கூடியது மறைக்கா கோரையாறு. ஆனால் இந்த கோறையாற்றில் சமீப காலமாக ஆகாயத்தாமரைகள் அளவுக்கு அதிகமாக வளர்ந்து மண்டி கிடக்கிறது. இதால் ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.இந்த வடிகால் வாய்க்காலை சூழ்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரி தண்ணீர் தாரளமாக செல்லும் அளவிற்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்
இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ்குமார் கூறுகையில், மழை காலங்கள் மற்றும் ஆறுகளில் கூடுதலாக தண்ணீர் வரும்போது வடிகால் வாய்க்கால் தான் பயிரை காப்பாற்றும். அந்த வகையில் கோறையாறு வடிகால் வாய்க்கால் ஒரு முக்கிய பங்காற்றும்.
காரணம் தண்ணீர் அதிகமாகி கரைகள் உடைப்பெடுத்தால் அண்ணா நகர், நெடும்பலம், கள்ளுகுடி, வேப்பஞ்சேரி, கருவேப்பஞ்சேரி, பாண்டி, செம்பியமங்களம், பாண்டிசத்திரம், இடையூர், சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பபை ஏற்படுத்தும். எனவே இந்த வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி உடனடியாக தூர்வார வேண்டும் என்றார்.
தூர்வார வேண்டும்
முன்னாள் அரசு வக்கீல் சிவசுப்பிரமணியன் கூறியதாவது:- இன்றைய விவசாய பணிகள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் தண்ணீர் இல்லாமல் போகிறது அல்லது பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்து கூடுதலாக தண்ணீர் வயல்களின் நிரம்பி பயிர்கள் அழுகும் சூழல் ஏற்படுகிறது. இந்த பருவநிலை மாற்றங்களால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பு அடைகிறார்கள்.
அவர்களை இந்த மாதிரியான பாதிப்பில் இருந்து பாதுகாக்க கூடியது இந்த வடிகால் வாய்க்கால் தான். அப்படிபட்ட இந்த வடிகால் வாய்க்காலை ஆகாயத்தாமரைகள் சூழ்ந்திருக்கின்றன. எனவே அதை அகற்றி தூர்வார வேண்டும். அவ்வாறு தூர்வாரி சரிசெய்தால் மட்டுமே விவசாய பணிகளை சிறப்பாக செய்ய முடியும் என்றார்.