சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் தட்டுப்பாடு ஏற்படும் என கவலை தெரிவிக்கின்றனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் தட்டுப்பாடு ஏற்படும் என கவலை தெரிவிக்கின்றனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கூத்தாநல்லூர் அருகே உள்ளது வெள்ளக்குடி கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக, வெள்ளக்குடியில் 21 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
அதன் பிறகு, குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் பொருத்தப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
குடிநீர் குழாய் உடைந்து...
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த தொட்டியில் இருந்து தண்ணீர் கசிகிறது.
இதன் காரணமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் செல்லும் குழாய் உடைந்து விட்டது.
தண்ணீர் தட்டுப்பாடு
இதனால், அதிகளவிலான தண்ணீர் தேவையில்லாமல் வெளியேறுகிறது. இதையடுத்து உடைந்து போன குழாயில் பெல்ட் சுற்றி வைக்கப்பட்டது. என்றாலும், சுற்றப்பட்ட பெல்ட்டும் தண்ணீர் வரும்போது தாக்குப்பிடிக்க முடியாமல் கழன்று விடுகிறது. இதனால், குழாய் வழியாக குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்கிறது. முறையாக தண்ணீர் செல்லாவிட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்து போன குடிநீர் குழாய்யை அகற்றி விட்டு புதிதாக அமைத்து தர வேண்டும். மேலும் சேதமடைந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.