நாளையுடன் பிரசாரம் நிறைவு - ஈரோட்டில் அரசியல் கட்சியினர் உச்சக்கட்ட பிரசாரம்..!


நாளையுடன் பிரசாரம் நிறைவு - ஈரோட்டில் அரசியல் கட்சியினர் உச்சக்கட்ட பிரசாரம்..!
x

ஈரோட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம்தமிழர் கட்சி போட்டியிடுவதால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களை தவிர 73 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதே போல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் முதல் கட்ட பிரசாரம் செய்தார். மேலும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் பிரசாரம் செய்தனர்.

இதேபோல் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் ஆகியோரும் பிரசாரம் செய்தனர். பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைவதால் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. பிரசாரம் நாளையுடன் நிறைவடைவதால் கடந்த ஒருவாரமாகவே தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

இன்று காலை முதல் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேள தாளம் முழங்க தொண்டர்களுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். அரசியல் கட்சியினருடன் ஏராளமான பெண்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் தொகுதி முழுவதும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினராகவே உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணியாற்ற பல்வேறு இடங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர் வந்ததால் ஈரோடு மாநகரம் கடந்த 20 நாட்களாகவே கூட்டமாக இருந்தது. தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினர் நிரம்பி காணப்பட்டனர்.

மேலும் ஈரோடு நகரின் சாலைகளில் விலை உயர்ந்த கார்களும் பவனி வந்து கொண்டு இருந்தது. நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிந்ததும் வெளிமாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே நாளை மாலையுடன் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்புகிறார்கள்.


Next Story