நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் கோவில்
பாண்டியர் கால சிவ ஆலயங்களில் பிரசித்தி பெற்றது நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில். இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் குறிப்பாக ஆனி மாதம் நடைபெறும் ஆனித் தேரோட்ட பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜூலை மாதம் நடைபெறும் தேரோட்டத்தில் நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
பந்தல் கால்
இந்த விழாவிற்கான தொடக்கமாக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதற்காக நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து அப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலாவும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோவில் யானை காந்திமதி முன்செல்ல, அப்பர் சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக வந்தார். பின்னர் கோவில் மகா மண்டபத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பந்தல் காலை பக்தர்கள் சுமந்து செல்ல, சுவாமி சன்னதி கோவில் வாசல் மண்டபத்தில் பந்தல் கால் நடப்பட்டது.
அப்பர் திருவிழா
இந்த விழாவை தொடர்ந்து ஊர் காவல் தெய்வமாக விளங்கும் பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதனை தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் 10 நாட்கள் விநாயகர் திருவிழாவும், அதன் பின்னர் அப்பர் திருவிழா 10 நாட்களும் நடைபெறுகிறது.
வருகிற ஜூலை மாதம் நெல்லையப்பருக்கான ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. மொத்தம் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் ஆனி பெருந்திருவிழாவின் முதல் விழாவான பந்தல்கால் நடும் நிகழ்ச்சியில் நேற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.