தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில்நெல் மூட்டைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தொடர் கண்காணிப்பு


தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில்நெல் மூட்டைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தொடர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:30 AM IST (Updated: 2 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் நெல் மூட்டைகளை கணக்கெடுப்பு செய்யும் பணியை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

கணக்கெடுப்பு பணி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று முன்தினம் திறந்தவெளி நெல் கிடங்கில் நேரில் ஆய்வு நடத்தினார்.

இந்த திறந்த வெளி கிடங்கில் 22 ஆயிரத்து 273 டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததும், அதில் 7 ஆயிரத்து 174 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பியிருந்ததும் தெரியவந்தது. திறந்தவெளி கிடங்கில் 15 ஆயிரத்து 98 டன் நெல் மூட்டைகள் இருப்பில் இருப்பதும் தெரிந்தது. இதை தொடர்ந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர் கண்காணிப்பு பணி

இந்த நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் நெல் மூட்டைகளை கணக்கெடுக்கும் பணியை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தற்போது திறந்தவெளி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள நெல் மூட்டைகளை முழுமையாக அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி முடிவடையும் போது இருப்பு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் சரியாக இருக்கிறதா? அல்லது குறைகிறதா என்பது குறித்து முழுமையான விவரங்கள் கிடைக்கும்.

இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கூறுகையில், திறந்தவெளி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் அட்டிகளை கணக்கெடுப்பு செய்தபோது அது சரியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சில அட்டிகளில் நெல் மூட்டைகள் கூடுதலாகவும், சிலவற்றில் குறைவாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.


Next Story