கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி,
கேபிள் டி.வி. நிலுவைத்தொகை என்ற பெயரில் காவல்துறை, வருவாய்த்துறை மூலம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை குற்றவாளி போல் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும், விலையில்லாமல் செட்டாப் பாக்ஸ் வழங்கி விட்டு தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சார்லஸ் வில்லியம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும், தனி நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். இதில் மாநில தலைவர் வீரமுத்து, பொதுச்செயலாளர் வெள்ளைச்சாமி, துணைத் தலைவர் தணிகைவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.