ரூ.44,125 கோடி புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: தங்கம் தென்னரசு
அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய தொழில்களுக்கான அனுமதி அளிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டம் முடிவடைந்தபின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 15 முதலீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 15 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிப்பததன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வாகன உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், பேட்டரி உற்பத்தி உள்ளிட்ட துறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ரூ.1,707 கோடி மதிப்பில் மில்கிமிஸ்ட் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான கொள்கை உள்ளிட்ட 3 முக்கிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காற்றாலைகளை புதுப்பிக்கும் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தால் மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரூ.44,125 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.