காளை முட்டியதில் பார்வையாளர் பலி
காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்தார்.
மணப்பாறை:
ஜல்லிக்கட்டு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் புனித வியாகுல மாதா ஆலய திடலில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர் ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் வழக்கப்படி செவலூர் சின்னாக்கவுண்டர் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்தும், சீறிப்பாய்ந்தும் வந்த காளைகள், அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை அருகில் நெருங்க விடாமல் களத்தில் நின்று விளையாடின. சில காளைகள் வீரர்களை முட்டித்தூக்கி வீசி பந்தாடின.
காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
இருப்பினும் வீரர்கள், காளைகளுடன் மல்லுக்கட்டி, அவற்றின் திமிலை இறுகப்பற்றி அடக்கினர். இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள், கிப்ட் பாக்ஸ் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நேற்று காலை சுமார் 9 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 679 காளைகள் களம் கண்டன. காளைகளை அடக்க ஒரு குழுவுக்கு 25 பேர் என 11 குழுக்களாக மொத்தம் 275 வீரர்கள் களமிறங்கினர். இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 25 பேர் காயமடைந்தனர்.
பார்வையாளர் சாவு
அவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த பார்வையாளர் மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோவில் பூசாரிப்பட்டியை சேர்ந்த முருகன்(வயது 54) என்பவர் உள்பட 3 பேர் மேல்சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.