5 ஆண்டுகளாக நடைபெறும் புறவழிச்சாலை பணிகள், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
திருத்தணி அருகே 5 ஆண்டுகளாக நடைபெறும் புறவழிச்சாலை பணிகள், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரத்தில் நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு 30 மீட்டர் அகலம், 3.24 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.46 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலம், திருத்தணி எம்.ஜி.ஆர். நகர் அருகே ரூ.10 கோடியே 50 லட்சம் மதிபீட்டில் ரெயில் தண்டவாளத்திற்கு அருகே உயர்மட்ட தூண்கள் அமைக்கும் பணிகளை ரெயில்வே நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்படைத்தனர்.
ரெயில்வே நிர்வாகம் சார்பில் டெண்டர் விடுப்பட்டு பணிகள் சில மாதங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் ஒப்பந்ததாரர் பணிகளை பாதியிலே நிறுத்தி விட்டனர். இதனால் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் ஏற்கெவே டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரின் அனுமதியை ரத்து செய்து, ரெயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க புதிய டெண்டர் விடுப்பட்டது. இதனையடுத்து புதிய ஒப்பந்ததாரர் மூலம் மேம்பாலம் அமைக்க தூண்கள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த சில மாதங்களாகவே மேம்பால பணிகள் நடைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி தெரிவித்ததாவது : புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்து விட்டனர். தற்போது ரெயில்வே நிர்வாகம் தண்டவாளங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மீது கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிகள் மட்டுமே நடைபெறாமல் உள்ளது. ரெயில்வே நிர்வாகத்திடம் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்மட்ட மேம்பால பணிகள் ஒரு சில மாதங்களில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றார்.
கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புறவழி சாலை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.