காலை சிற்றுண்டி அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்கப்படும்- ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி பேட்டி


காலை சிற்றுண்டி அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்கப்படும்- ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி பேட்டி
x

காலை சிற்றுண்டி அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

ஈரோடு


காலை சிற்றுண்டி அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

வெற்றி உறுதி

தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 20 மாத ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்து வருகிறோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மக்களிடம் பெருவாரியான ஆதரவு இருக்கிறது. இந்த தேர்தலில் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது உறுதி. இதில் மாற்று கருத்து இல்லை.

கடந்த 20 மாதங்களில் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட 80 சதவீத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மேலும் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி பொற்கால ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி புதுச்சேரி உள்பட 40-க்கு 39 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

காலை சிற்றுண்டி

தமிழ்நாட்டில் வெற்றிடம் இருந்ததாக கூறப்பட்டது. அந்த வெற்றிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரப்பி உள்ளார். தலைசிறந்த முதல்-அமைச்சர் என்பதை விட தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்றும் வகையில் அவர் செயல்படுகிறார். கருத்து கணிப்பில் தமிழ்நாடு 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 1,545 பள்ளிக்கூடங்களில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விலையில்லா வேட்டி-சேலை உற்பத்திக்கான டெண்டர் விடுவதில் 3 மாதம் காலதாமதம் ஏற்பட்டது. விரைவில் அறிவிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு விண்ணப்பம் மூலமாக மாற்று ஒருவரிடம் பொருட்களை வழங்கவும் தமிழ்நாட்டில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கண் கருவிழிகள் மூலமாக பொருட்களை வினியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார்.


Next Story