களை கட்டும் களம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் யார்?


ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்ற கேள்வி அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்து உள்ளது.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்ற கேள்வி அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்து உள்ளது.

அரசியல் களம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன.

இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இடைத்தேர்தல்

ஈரோடு சட்டமன்ற தொகுதியாக ஈரோடு இருந்தபோதும், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என்று பிரிந்த பிறகும் தேர்தல் களத்தில் இதுவரை இடைத்தேர்தலை சந்திக்காத தொகுதிகளில் ஈரோடும் ஒன்று. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பது, கட்சியின் உள்கட்டமைப்பு ஆலோசனை என்று சுறுசுறுப்பு அடைந்து உள்ளனர்.

காங்கிரஸ்

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே விட்டுக்கொடுத்து, கூட்டணி தர்மத்தை கடைபிடித்து இருக்கிறார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. பொதுவாக நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் மற்ற கட்சிகளை விட தாமதம் ஆகும். இந்த முறை தொகுதி யாருக்கு என்பது முன்கூட்டியே தெரிந்துவிட்ட நிலையிலும் வழக்கம்போல் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

மறைந்த எம்.எல்.ஏ.வின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தேர்தல் களத்தில் மக்களை சந்தித்தால், அவர்கள் வெற்றி பெறுவது எளிது என்று ஒரு கருத்து இருக்கிறது. எனவே மறைந்த எம்.எல்.ஏ.வின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவரது மனைவி வரலட்சுமி இளங்கோவன் மற்றும் இளைய மகன் சஞ்சய் சம்பத், திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா ஆகிய 4 பேரில் யாராவது நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் விரும்புகிறார்கள். கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் இவர்தான் என்று காங்கிரஸ் கட்சியினராலே சுட்டிக்காட்டப்பட்ட முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஆகியோரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால் முடிவு மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கையில்தான் இருக்கிறது. கட்சியின் தற்போதைய தலைவர்கள் கூட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தேர்தலில் போட்டியிட வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே சஞ்சய் சம்பத் களம் இறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதுவரை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார்? என்பது முறைப்படி அறிவிக்கப்படவில்லை.

அ.தி.மு.க.

இதுபோல் அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று த.மா.கா.வினர் ஆர்வமாக இருந்தனர். ஆனால், இங்கு அ.தி.மு.க. போட்டியிடும் என்பது உறுதி ஆகி இருக்கிறது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இதை அறிவித்து விட்டார். எனவே அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. பெரும்பாலானவர்கள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவார் என்று அறுதியிட்டு கூறுகிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு உள்பட வேறு சிலரும் போட்டியில் இருப்பதாக கூறப்பட்டாலும், கே.வி.ராமலிங்கம்தான் வேட்பாளர் ஆவார் என்று கட்சியினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க.வும், காங்கிரசும் நேரடி போட்டியில் இறங்கி இருக்கிறது. ஆளும் கட்சி கூட்டணியாக காங்கிரஸ் களம் இறங்கினாலும், இந்த தொகுதி தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை என்பதில் தி.மு.க.வினர் சற்று அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும், முதல்-அமைச்சரே முழு மனதுடன் தொகுதியை காங்கிரசுக்கு கொடுத்து இருப்பதால் எந்த எதிர்ப்பினையும் காட்டாமல் இருக்கிறார்கள்.

பா.ஜனதா

இதுபோல் பா.ஜனதா போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அந்த கட்சி சார்பில் தி.மு.கவுக்கு எதிராக களம் இறங்குவோம் என்ற பதிலின் மூலம் பா.ஜனதா அ.தி.மு.க.வுக்கு ஆதரவு என்ற நிலையை எடுத்து இருக்கிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.ம.மு.க., ம.நீ.ம உள்ளிட்ட கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை.

இன்னும் வேட்புமனு தாக்கல் செய்ய 10 நாட்களுக்கும் மேல் கால அவகாசம் இருப்பதால் இனி வரும் நாட்கள் இன்னும் ஈரோட்டின் தேர்தல் ஜூரம் உயர்ந்து கொண்டே இருக்கும்.


Next Story