ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம்- மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடந்தது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தலைமையில் நடந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அனைத்து விதிகளும் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. அரசியல் கட்சியினர், பொதுமக்கள், வாக்காளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சுதந்திரமான, அமைதியான, நேர்மையான தேர்தல் நடத்த வேண்டும்.
பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மாவட்ட அளவிலும் அனுமதி பெறாமல் மண்டபம் உள்ளிட்ட அரங்கிலும், கோவில் போன்ற இடங்களிலும் கூட்டம், கிடா விருந்து, உபசரிப்புகள், காது குத்துதல், மொட்டை போடுதல் போன்ற பெயர்களில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. உண்மையான நிகழ்வு நடத்துவதாக இருந்தால், முறையாக அனுமதி பெற வேண்டும்.
இந்த தொகுதிக்குள் கட்சி கொடிகள் கட்டியபடி கார் செல்லக்கூடாது. அதற்கும் அனுமதி பெற வேண்டும். துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதை உரிய போலீஸ் நிலையத்திலோ அல்லது கலெக்டர் அலுவலகத்திலோ ஒப்படைக்க வேண்டும். வழக்கம்போல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்யலாம். தனியார் மற்றும் அரசு சுவர்களில் விளம்பரம், படம் வரைதல், பிரசார யுக்திகளை அனுமதி பெறாமல் கடைபிடிக்கக்கூடாது.
புதிய வழிமுறைகள்
தேர்தல் ஆணையம் வருகிற நாட்களில் தெரிவிக்கும் புதிய வழிமுறைகள், உடனடியாக பின்பற்றப்படும். அச்சகங்களில் தேர்தல், அரசியல் கட்சிகள் போன்றவை தொடர்பாக ஏதும் அச்சிடப்பட்டால் அதற்கு உரிய அனுமதி பெறவேண்டும். மேலும் ஆர்டர் கொடுப்பவர்களின் முழு விபரமும் ஆதாரத்துடன் பதிவு செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் தேர்தல் நடப்பதால் அனைத்து அலுவலர்களும் முழுமையாக பணி செய்ய வேண்டும்.
வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் விதிமுறைகள், வேட்பாளருக்கு வழங்கப்படும். பொதுமக்கள், வாக்காளர்கள், அரசியல் கட்சியினர், தேர்தல் ஆணையத்தில் சிவிஜில் என்ற செல்போன் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், உதவி ஆணையாளர் விஜயகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், போலீசார், தேர்தல் பணி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.