கோடை மழையால் பசுமையாக காட்சி அளிக்கும் பர்கூர் மலைப்பகுதி
கோடை மழையால் பர்கூர் மலைப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.
அந்தியூர்
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. கோடை காலத்தில் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்தும், செடி, கொடிகள் கருகியும் காணப்பட்டன. கடந்த சில நாட்களாக கடம்பூர் மலைப்பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மரங்கள் துளிர்த்து பசுமையாக காணப்படுகின்றன. செடி, கொடிகளும் வளர்ந்து உள்ளன. இதனால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் கார்கேகண்டி வரை 35 கிலோ மீட்டர் தூரம் வரை மலைப்பாதை முழுவதும் பச்சை போர்வை போர்த்தியது போன்று பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையின் இயற்கை அழகை ரசித்தவாறு செல்கின்றனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.