முன்கூட்டியே எடுத்த நடவடிக்கையால் 3 கொலை சம்பவம் தடுக்கப்பட்டது; போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பேட்டி


முன்கூட்டியே எடுத்த நடவடிக்கையால் 3 கொலை சம்பவம் தடுக்கப்பட்டது; போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 7:09 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் முன்கூட்டியே எடுத்த நடவடிக்கையால் 3 கொலை சம்பவம் தடுக்கப்பட்டது என்று போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கூறினார்.

தென்காசி

விருது

சென்னையில் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்த புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்ததற்காக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் முதல்-அமைச்சரிடம் விருது பெற்றார்.

மாநாட்டுக்கு சென்று திரும்பிய போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சமாதான கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதனை தீர்த்து வருகிறோம். குறிப்பாக சாதி ரீதியாகவோ, மதரீதியாகவோ ஏற்படும் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டுபிடித்து அவர்களிடம் பேசி தீர்த்து வருகிறோம்.

கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டபோது அதனை பேசி தீர்த்தோம். செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் சமாதான கூட்டம் நடத்தினோம்.

குண்டர் சட்டம்

மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களை கண்டுபிடித்து 63 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலரிடம் பிணை பத்திரம் வாங்கி அவர்களை கண்காணித்து வருகிறோம். திருட்டு வழக்குகளில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கடையநல்லூரில் இளம்பெண்ணை கொன்று அடையாளம் காண முடியாதவாறு முகத்தை சிதைத்த வழக்கில் துப்பு துலக்கி கொலையாளி கைது செய்யப்பட்டார்.

சைபர் கிரைம் போலீசார் சிறப்பாக செயல்பட்டு, வலைத்தளம் மூலம் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிற மாநிலங்களுக்கு சென்று கைது செய்து பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

முன்கூட்டியே தடுக்க நடவடிக்கை

மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு வந்து புகார் மனு கொடுப்பவர்களுக்கும் உரிய பதிலளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தென்காசி பகுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றங்கள் நடைபெறாத அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் உள்ளவர்களை இதற்கு முன் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை கண்காணித்து குற்றச்செயல் நடக்காமல் தடுக்கப்படுகிறது. இவ்வாறு முன்கூட்டியே எடுத்த நடவடிக்கையால் மாவட்டத்தில் 3-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு முகாம்கள்

நடப்பாண்டில் இதுவரை 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற கொடுஞ்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் போக்சோ வழக்குகள் தொடர்பாக பொதுமக்களிடமும் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சுமார் 628 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டதன் விளைவாக கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளன.

சாலை விபத்து வழக்குகளை பொறுத்தவரையில் நடப்பு ஆண்டில் இதுவரை 177 உயிரிழப்பு வழக்குகளும், 672 கொடுங்காயம் மற்றும் சிறுகாய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சுமார் 40 விபத்து வழக்குகள் குறைந்துள்ளது. மேலும் சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கும் இடத்தை கண்டறிந்து, அங்கு விபத்துகள் நடக்காமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காலை மற்றும் மாலை நேரங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை 59 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 132 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

தென்காசி நகரில் சாலைகள் குறுகலாக உள்ளதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இருப்பினும், அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் இடங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்கின்றனர். புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெருக்கடி மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

புளியங்குடி மற்றும் ஆலங்குளத்துக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. விரைவில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தாமரை விஷ்ணு உடனிருந்தார்.


Next Story