இப்படிச் செய்தால் சாமானிய மக்களின் நம்பிக்கையை காவல்துறை இழக்க நேரிடும் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை


இப்படிச் செய்தால் சாமானிய மக்களின் நம்பிக்கையை காவல்துறை இழக்க நேரிடும் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
x

கோப்புப்படம் 

புகார் கொடுக்க வருபவர்களை தாக்கினால் சாமானிய மக்களின் நம்பிக்கையை காவல்துறை இழக்க நேரிடும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கூறியுள்ளது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த வக்கீல் சுகுமாரன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற என்னை தாக்கிய மேலூர் காவல் நிலைய துணை காவல் கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய மேலூர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி புகழேந்தி, இந்த வழக்கு குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தென்மண்டல ஐஜி தாக்கல் செய்த பதில் மனுவில், உதவி ஆணையர் ரவிக்குமார், காவல் ஆய்வாளர் சார்லஸ் உள்ளிட்ட 3 காவலர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

மேலும், வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் செய்த மேலூர் காவல் ஆய்வாளர் மன்னவன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையை பார்த்த நீதிபதி, தென்மண்டல ஐஜி உடனடியாக நடவடிக்கை எடுத்ததை கோர்ட்டு பாராட்டுகின்றது என்று கூறினார். மேலும், புகார் கொடுக்க வருபவர்களை காவல்துறையினர் தாக்கினால், சாமானிய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காவல்துறை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Next Story