கடந்த 2019-20-ம் ஆண்டில் சிறு, குறு தொழில்துறையில் ரூ.28½ கோடி தேவையற்ற முதலீடு சட்டப்பேரவை பொதுகணக்கு குழு தலைவர் குற்றச்சாட்டு
கடந்த 2019-20-ம் ஆண்டில் சிறு, குறு தொழில்துறையில் ரூ.28½ கோடி தேவையற்ற முதலீடு சட்டப்பேரவை பொதுகணக்கு குழு தலைவர் குற்றச்சாட்டு
கடந்த 2019-20-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் சிறு, குறு தொழில்துறையில் தேவையற்ற முதலீடு ரூ.28 கோடியே 47 லட்சத்துக்கு செய்யப்பட்டு இருப்பதாக சட்டப்பேரவை பொது கணக்குக்குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கூறினார்.
பொதுகணக்கு குழுவினர் ஆய்வு
தமிழக சட்டப்பேரவை பொது கணக்குக்குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள் காந்திராஜன் (வேடசந்தூர்), சிந்தனைசெல்வன் (காட்டுமன்னார் கோவில்), பிரகாஷ் (ஓசூர்), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர்), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), ராஜமுத்து (வீரபாண்டி), வேல்முருகன் (பண்ருட்டி) ஆகியோர் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர் பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களை சந்தித்து மருத்துவ சேவைகள் குறித்தும், மருத்துவ சேவையின் திருப்தி குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து மருந்து வழங்கும் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர் நோயாளிகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படும் மருந்துகளின் விவரங்கள் குறித்தும், இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகளின் விவரங்களை பதிவேடுகளில் பார்வையிட்டு இருப்பு விவரம் சரியாக உள்ளதா? என சரிபார்த்தனர்.
கால்நடை மருத்துவமனை
தொடர்ந்து களங்காணி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம், இடைநிற்றல் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் உணவின் தரம் குறித்தும், முட்டை வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், முட்டைகளின் இருப்பு விவரத்தையும் சரிபார்த்து ஆய்வு மேற்கொண்டனர். இதுபோல் காரைகுறிச்சி புதூர், தாத்தையங்கார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிகிச்சை வசதிகளை குழுவினர் ஆய்வு செய்து சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
தேவையற்ற முதலீடு
பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் குழுவின் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங், சின்ராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் முடிந்ததும் குழுவின் தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
எங்களது ஆய்வில் நாமக்கல் மாவட்டத்தில் சிறு, குறு தொழில்துறை சார்பில் 2019-–20-ம் ஆண்டு நடந்த தேவையற்ற பயனளிக்காத முதலீடு ரூ.28 கோடியே 47 லட்சம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய பதில் அளித்திருக்கிறார்கள். இதை சென்னையில் செயலாளரை வரவழைத்து, மீண்டும் ஆய்வு செய்யப்படும். அதேபோல் 2013-14-ம் ஆண்டில் நெடுஞ்சாலை துறையில், நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து கணக்கெடுப்பை கையாண்டதால் ஏற்பட்ட தவிர்க்கக் கூடிய செலவினம் ரூ.1 கோடியே 67 லட்சம். இதுவும், விசாரணை செய்யப்பட்டு உள்ளது.
நிதிநிலை அறிக்கை
கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்கள், வரிப்பணத்தை வீணாக செலவழித்தது, வரிப்பணத்தை சரியான முறையில் கையாளாமல், நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட அந்தந்த துறைகள் தவறு செய்ததை எல்லாம் சுட்டிக்காட்டி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் தேன்மொழி, துணைச்செயலாளர் ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
=====
மயங்கி விழுந்த மருந்தாளுனரால் பரபரப்பு
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுக்கணக்கு குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மருந்து இருப்பு விவரம் மற்றும் வினியோகம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது அங்கிருந்த மருந்து கிடங்கு அலுவலர் அருள்பிரகாசம் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.