நாளை முதல் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்? - அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தகவல்
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் நாளை முதல் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை. ஊதிய ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 3-ந் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்த்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்படி ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒருவர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
நாளை (புதன்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் கூறியுள்ளார்.
ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீர்வு கண்டு வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்பதே இப்போது அரசுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.