பஸ்-லாரி மோதல்; 10 பேர் படுகாயம் - 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்-லாரி மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ் காஞ்சீபுரத்தில் இருந்து வேலை ஆட்களை ஏற்றி கொண்டு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்தது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் அருகே செல்லும்போது பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தில் மோதி எதிரே சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரி மீது வேகமாக மோதியது. இதில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தனியார் பஸ்சின் முன்பக்கம் சேதம் அடைந்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தால் 2 மணி நேரத்துக்கு மேலாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி விடுமுறைக்காக சென்னையில் இருந்து பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற ஊருக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.