விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் 4 அரசு பஸ்கள் ஜப்தி


விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் 4 அரசு பஸ்கள் ஜப்தி
x

திருப்பூரில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் 4 அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

திருப்பூர்

திருப்பூரில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் 4 அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

லாரி உரிமையாளர் பலி

கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 71). லாரி உரிமையாளர். இவர் கடந்த 7-12-2015 அன்று மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்தில் பலியானார். இதைத்தொடர்ந்து காளிமுத்துவின் மனைவி, மகள்கள், மகன் ஆகியோர் இழப்பீடு கேட்டு திருப்பூர் மாவட்ட வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர்.

25-10-2021 அன்று, காளிமுத்துவின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்க கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்பிறகும் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருப்பூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்தனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் அசோக்குமார் ஆஜராகி வாதாடினார்.

விபத்து இழப்பீடு

திருப்பூரை சேர்ந்தவர் கருணாகரன். இவர் சென்னைக்கு அரசு பஸ்சில் சென்றபோது உளுந்தூர் பேட்டை அருகே விபத்தில் சிக்கி காயமடைந்தார். இதற்கு இழப்பீடு கேட்டு திருப்பூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். இவருக்கு ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடு வழங்க கடந்த 27-4-2019 அன்று தீர்ப்பானது. ஆனால் அரசு போக்குவரத்து கழகத்தினர் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி திருப்பூரில் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

இதுபோல் திருப்பூரை சேர்ந்தவர் ராஜன். இவர் கடந்த 2008-ம் ஆண்டு கோவை காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு சென்றபோது அரசு பஸ் மோதி காயமடைந்தார். விபத்து இழப்பீடு கேட்டு திருப்பூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு நடந்தநிலையில் அவர் இறந்து விட்டார். அதன்பிறகு அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டனர். கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதிமன்றத்தில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க சமரசம் செய்யப்பட்டது. அதன்பிறகும் அரசு போக்குவரத்து கழகத்தினர் வழங்காததால் நேற்று கோர்ட்டு உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

மேலும் திருப்பூரை சேர்ந்த மாரப்பன் என்பவர் அரசு பஸ் மோதிய விபத்தில் இறந்தார். அவரது மனைவிக்கு ரூ.10½ லட்சம் இழப்பீடு வழங்க 13-12-2017 அன்று கோர்ட்டில் தீர்ப்பானது. ஆனால் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது. மேற்கண்ட 3 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் பழனிசாமி ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story