தூத்துக்குடி மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த வாழைக்கன்றுகள்
தூத்துக்குடியில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு விற்பனைக்காக வாழைக்கன்றுகள் வந்து குவிந்தன.
ஆயுத பூஜை
நவராத்திரி விழாவின் கடைசி நாள் ஆயுத பூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் தொழில் நிறுவனங்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
பூஜையின் போது கொண்டைக்கடலை, அவல், பொரி உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவர். மேலும் ஆயுத பூஜையை முன்னிட்டு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வாழைக்கன்றுகள், மாவிலை மற்றும் குருத்தோலை தோரணம் கட்டுவர்.
வாழைக்கன்றுகள் குவிந்தன
இதையொட்டி தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளான ஸ்ரீவைகுண்டம் ஆத்தூர், ஜக்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான வாழைக்கன்றுகள் விற்பனைக்காக தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
ஒரு ஜோடி வாழைக்கன்று ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதே போன்று சிறிய பாக்கெட்டுகளாக அவல், சோளப்பொரி, அரிசிப்பொரி உள்ளிட்டவையும் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பாக்கெட்டும் ரூ.10 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.