குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்
பொட்டப்பாளையம் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம் உள்ளது.
திருப்புவனம்
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது பொட்டப்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது கீழக்கரிசல்குளம், மேலக்கரிசல்குளம் பகுதிகள். மதுரை-நெடுங்குளம் செல்லும் சாலையில் உள்ள பொட்டப்பாளையத்திலிருந்து கீழக்கரிசல்குளம், மேலக்கரிசல்குளம் சாலை வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை இணைக்கின்றது. இந்த கரிசல்குளம் சாலையில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பள்ளமான இடங்கள் குளம் போல் காணப்படுறது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். பொட்டப்பாளையத்தில் உள்ள நெடுங்குளம் சாலை வழியாக மதுரை பெரியார் நிலையம் செல்ல 15 கிலோமீட்டர் தூரம் ஆகும். ஆனால் இந்த கரிசல்குளம் சாலை வழியாக அவனியாபுரம் சென்று மதுரை பெரியார் நிலையம் செல்ல 10 கிலோமீட்டர் தூரம்தான் ஆகும். பயணம் நேரம் குறைவதாலும், போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் இருப்பதாலும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றி தார்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.