குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ராமநாதபுரத்தில் ரெயில்வே மேம்பால பணிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் ரெயில்வே மேம்பால பணிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ரெயில்வே மேம்பால பணி
ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் ரெயில் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் அருகே ராமநாதபுரம்-கீழக்கரை சாலைகளை இணைக்கும் வகையில் சுமார் ரூ.30 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ல் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் பாலத்தின் கீழே இருபுறமும் வாகனங்கள் செல்ல தற்காலிகமாக சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இந்த சாலை வழியாகத்தான் தினமும் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்கள், அரசு பஸ்கள், பொதுமக்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாகத்தன் செல்கின்றன். இந்த சாலை பெயரளவுக்கு அமைக்கப்பட்டதால் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வதால் இப்பகுதியை கடந்து செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
செவி சாய்க்கவில்லை
இந்த சாலையை சீரமைக்குமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் க.நாகேசுவரன் கூறியதாவது:- இந்த பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் அரசு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. இதனால் பிணத்திடம், கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டமும் நடத்தி விட்டோம். ரெயில்வே மேம்பால பணி கடந்த 5 வருடமாக நடந்து வருகின்றது. இன்னும் முடிந்த பாடு இல்லை.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமான இந்த சாலையில் தினசரி இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் செல்கின்றனர். மழை பெய்தால் பள்ளம் இருப்பது கூட தெரியாது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கலெக்டர் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
சமூக ஆர்வலர் பாஸ்கரன் கூறியதாவது:- ஏற்கனவே பள்ளம் படுகுழியாக உள்ள இந்த சாலையில் தற்போது மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்பதால் வாகனங்கள் சிரமத்துடன் கடந்து செல்கின்றன. இதனை தற்காலிகமாக கூட சீரமைக்காமல் உள்ளது மிகவும் வேதனைக்குரியது.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.