மாடு-குதிரை வண்டி எல்கை பந்தயம்: மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கி குதிரை படுகாயம்


ஆலங்குடி அருகே மாடு- குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கி குதிரை படுகாயம் அடைந்தது. இதேபோல் குதிரை தள்ளியதில் ஆயுதப்படையை சேர்ந்த போலீஸ்காரருக்கு கால் முறிந்தது.

புதுக்கோட்டை

எல்கை பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எஸ்.குளவாய்பட்டியில் சேமத்து முனீஸ்வரர் கோவில் 14-ம் ஆண்டு அபிஷேக ஆராதனை மற்றும் மழை மாரியம்மன் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் நேற்று நடைபெற்றது. இதில் மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு ஆகிய பிரிவுகளிலும், குதிரை வண்டி பந்தயத்தில் பெரிய குதிரை, நடுக்குதிரை பிரிவுகளிலும் போட்டி நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 76 ஜோடி மாட்டு வண்டிகளும், 30 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன. இந்த போட்டியில் கலந்து கொண்ட குதிரை மற்றும் மாட்டு வண்டிகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

குதிரை படுகாயம்

முன்னதாக 18 குதிரை வண்டிகளுடன் நடுக்குதிரை போட்டி நடைபெற்றது. இதில் திருநெல்வேலியை சேர்ந்த வாலிபர் தனது குதிரையுடன் போட்டியில் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குரும்பூர் என்ற இடத்தில் சென்றபோது குதிரையின் பின்னங்கால் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது.

இதில் நிலைதடுமாறிய குதிரை கீழே விழுந்து படுகாயம் அடைந்தது. மேலும், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரும், குதிரையில் சென்ற வாலிபரும் தூக்கி வீசப்பட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதையடுத்து, மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த குதிரையை சுமார் 20 நிமிடங்கள் போராடி விழாக்குழுவினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.

கால் முறிந்தது

இந்தநிலையில், குதிரை பந்தயத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த நவீன் (வயது 14) மீது குதிரை மோதியது. இதில், முகத்தில் காயம் அடைந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் மற்றொரு குதிரை தள்ளியதில் புதுக்கோட்டை ஆயுதப்படையை சேர்ந்த போலீஸ்காரர் விஜய்க்கு (24) காலில் முறிவு ஏற்பட்டது. அவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.


Next Story