மணல் குவாரி அமைக்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு
மணல் குவாரி அமைக்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
தாமரைக்குளம்:
மணல் குவாரி
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 351 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 1,500 மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது மணல் குவாரி செயல்படாததால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் மாடுகளுக்கு தீவனம் கூட வாங்கி போட முடியவில்லை. குடும்ப செலவிற்கு பெரிதும் அல்லாடும் சூழ்நிலை உள்ளது. எனவே எங்களது வாழ்வாதாரத்தை காக்க மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
சாலை வசதி
இளைஞர்கள் சிலர் கொடுத்த மனுவில், குழுமூரில் நீட் தேர்வால் இறந்த அனிதாவின் நினைவாக நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் மாலை நேரத்தில் சிறுவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அறிவு சார் திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித்தேர்வுகளுக்கு இங்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் தங்கி படித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு இல்லாததால் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே சாலை மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில் மனு அளிக்க வந்த மக்களுக்கு ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு குறித்த மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.