லப்பை கிருஷ்ணாபுரத்தில் காளை விடும் விழா
லப்பை கிருஷ்ணாபுரத்தில் காளை விடும் விழா நடந்தது.
கே.வி.குப்பம்
லப்பை கிருஷ்ணாபுரத்தில் காளை விடும் விழா நடந்தது.
கே.வி.குப்பத்தை அடுத்த லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 163 காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு 157 காளைகளுக்கு மட்டும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் அ.கீதா, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் விஜயராணிசுந்தரம், சுகாதாரத் துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
காளைகள் ஓடும் வழியில் வாலிபர்கள் வழிமறித்து நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது மாடுகள் முட்டியதில் 14 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 3 மாடுகளுக்கும் காயம் ஏற்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல் பரிசு ரூ.55 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம் உள்பட மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.