தஞ்சையில், பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது


தஞ்சையில், பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது
x

தஞ்சையில், மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியின்போது சேதம் அடைந்த பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் மின் கம்பமும் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சையில், மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியின்போது சேதம் அடைந்த பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் மின் கம்பமும் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள்

தஞ்சையில் நான்கு ராஜவீதிகள் உள்ளன. இந்த ராஜவீதிகளின் மைய பகுதியில் அரண்மனை, அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. இந்த ராஜவீதிகளில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நான்கு ராஜ வீதிகளிலும் பழமையான பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. பல இடங்களில் வடிகால் மீது ஆக்கிரமிப்புகள் இருந்ததால் அதனை அகற்றி விட்டு கான்கிரீட் மூலம் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை கீழராஜ வீதி பிரதான சாலையில் தற்போது மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலையில் வரதராஜ பெருமாள் கோவில் எதிரே நேற்று முன்தினம் இரவு பொக்லின் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் நடந்தது.

பழமையான கட்டிடம் இடிந்தது

அப்போது சாலையோரம் இருந்த தனியாருக்கு சொந்தமான நூற்றாண்டு கடந்த பழமையான கட்டிடம் அருகே வாய்க்கால் சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை. இருந்தாலும், கட்டிடத்தின் முகப்பு பகுதியில் தையல் கடை, கியாஸ் அடுப்பு சர்வீஸ் சென்டர் ஆகியவை இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் நடந்தபோது திடீரென இந்த கட்டிடம் இடியத் தொடங்கியது. மேலும் அதன் அருகில் இருந்த மின் கம்பமும் சாய்ந்து விழுந்தன. சிறிது நேரத்தில் கட்டிடத்தில் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது.

மின்சாரம் நிறுத்தம்

உடனடியாக இதுகுறித்து மேற்கு போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு அனைத்து அதிகாரிகளும் விரைந்து வந்தனர். மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். இதையடுத்து இடிபாடுகள் அகற்றும் பணி மற்றும் மின் இணைப்பு சீரமைக்கும் பணி நடந்தது.

இரவு நேரம் என்பதால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியது. எப்போதும் பரபரப்பாக இயங்கும் தஞ்சை கீழராஜ வீதியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story