மதுரை மாநகரில் தூய்மை பணிகள் தனியார் மயம்
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன காப்பகம் அமைக்கப்படும். மதுரை மாநகரில் தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மேயர் இந்திராணி அறிவித்தார்.
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன காப்பகம் அமைக்கப்படும். மதுரை மாநகரில் தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மேயர் இந்திராணி அறிவித்தார்.
பரிசுகள்
மதுரை மாநகராட்சி 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம், மாநகராட்சி அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி, மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர், முதல்-அமைச்சரின் தொலை நோக்கு திட்டங்களால் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரைக்கு ரூ.8 ஆயிரத்து 500 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.114 கோடி கலைஞர் நூலகம், பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை ஆகியவற்றை அறிவித்து இருக்கிறார். அவருக்கு மாநகராட்சி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார். பின்னர் மேயர் இந்திராணி, பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்களை அறிவித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
* மதுரை மாநகராட்சி மாணவர்கள் போட்டி மற்றும் உயர் படிப்புகளை படிப்பதற்கு ஏற்ற வகையில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.
* மாநகராட்சியில் 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களின் வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும்.
* மாநகராட்சி பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் அறம் சார்ந்த வகுப்புகள் நடத்தப்படும்.
* மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு சுதந்திர தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
ஆரம்ப சுகாதார நிலையம்
* மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* 9 மாநகராட்சி பள்ளிகளில் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.3 கோடியே 64 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
* அனைத்து மாநகராட்சி கட்டிடங்களுக்கு ஒரே மாதிரியான வண்ணங்கள் பூசி, ஓவியங்கள் வரையப்படும்.
* மாநகராட்சியில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளது. கூடுதலாக 2 மையங்கள் அமைக்கப்படும்.
* அன்சாரி நகர், சாத்தமங்கலம், திருநகர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.66 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார ஆய்வகம் விரைவில் திறக்கப்படும்.
* அண்ணாத்தோப்பு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.95 லட்சம் செலவிலும், திடீர் நகரில் ரூ.45 லட்சமும், சுப்பிரமணியபுரத்தில் ரூ.60 லட்சம் செலவிலும் கட்டப்படும்.
* 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் பிரசவசேவை அளிக்கப்படும். மேலும் அனைத்து மையங்களிலும் ரேபிஸ் தடுப்பூசி போடப்படும்.
பிளாஸ்டிக் பொருட்கள்
* அடுத்த நிதியாண்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் (தூய்மை பணிகள்) தனியார் மயப்படுத்தப்பட உள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் தேவைக்கு ஏற்ப விதிமுறைப்படி தூய்மை பணியாளர்கள், வாகனங்கள், திடக்கழிவு தொட்டிகள் போதிய எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படும். நுண் உரமாகல் மையத்தில் அதிகளவு குப்பைகள் உரமாக்கப்படும்.
* அனைத்து வார்டுகளிலும் வாரம்தோறும் கொசு மருந்து தெளிக்கப்படும்.
* நகரில் தேங்கியுள்ள அனைத்து கட்டிட கழிவுகளும் அப்புறப்படுத்தப்படும்.
* காலியிடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க விதிமுறைகள் வகுக்கப்படும்.
* கடந்த ஆண்டு மட்டும் 128 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.12 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பல்லடுக்கு வாகனம்
* ஒரு மாதத்திற்கு இனி 500 நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்படும். கூடுதலாக ஒரு கருத்தடை மையம் அமைக்கப்படும்.
* சாலைகளில் மாடுகள் திரிவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* சாலையோர வியாபாரிகள் கணக்கீடு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படும்.
* பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* நகரில் உள்ள 134 கிலோ மீட்டர் சாலைகள் சீரமைக்கப்படும்.
* தயிர் மார்க்கெட் மற்றும் சுப்பிரமணியபுரம் மார்க்கெட்டுகள் மேம்படுத்தப்படும்.
* கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன காப்பகம் அமைக்கப்படும்.
* மாநகராட்சி பூங்காக்களில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும்.
* திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் திருமலை மகாலை சுற்றியுள்ள பகுதிகள் சீரமைத்து அழகுப்படுத்தப்படும்.
* கோச்சடை வைகை கரையில் பூங்கா அமைக்கப்படும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒபுளாபடித்துறை முதல் கல்பாலம் வரை மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.