சேவுகப்பெருமாள் அய்யனார் ேகாவில் பூப்பல்லக்கு விழா
சேவுகப்பெருமாள் அய்யனார் ேகாவில் பூப்பல்லக்கு விழா நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி பூப்பல்லக்கு விழா நடைபெற்றது.
வைகாசி திருவிழா
சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலை தேவியர் கோவில் வைகாசி விசாக திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற வைகாசி திருவிழா நிகழ்ச்சியில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் இத்திருவிழாவில் தினமும் இரவில் சிம்மம், ரிஷபம், பூதம், ஐந்து தலை நாகம் உள்ளிட்ட பல்வேறு வெள்ளி வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
கடந்த 9-ந் தேதி திருக்கல்யாணம் விழாவும், 10-ந் தேதி கழுவன் திருவிழாவும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 13-ந் தேதி திருத்தேரோட்டம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பூப்பல்லக்கு
வைகாசி விசாக நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு பூப்பல்லக்கு திருவிழா சிறப்பாக நடந்தது. இதையொட்டி பல ஆயிரம் கிலோ எடை கொண்ட வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சேவுகப்பெருமாள் அய்யனார் உடனான பூரண புஷ்கலை தேவியர் கோவில் மண்டபத்தில் இருந்து பல்லக்கில் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு இரட்டை மாடுகள் பூட்டிய சப்பரத்தில் பூப்பல்லக்கு வைக்கப்பட்டு மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனங்கள் நடைபெற்றன.
அதிகாலை 4 மணிக்கு நான்கு ரத வீதிகள் வழியாக பூப்பல்லக்கில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக வலம்வந்து காலை 6 மணிக்கு கோவில் முன்பு வந்தடைந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் வழிபாடுகள் நடைபெற்றது.
தரிசனம்
இதில் சிங்கம்புணரி நகர் பகுதி மற்றும் சுற்றி உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த குல தெய்வமாக வழிபடும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் மற்றும் கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம், பேஸ்கர் கரிகாலன், கணக்கர் கலைசெல்வன் மற்றும் சிங்கம்புணரி கிராமத்தார்கள், நாட்டார்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.