ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி


ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி
x
தினத்தந்தி 16 Oct 2023 1:45 AM IST (Updated: 16 Oct 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

தெப்பக்காடு-மசினகுடி இடையே மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

தெப்பக்காடு-மசினகுடி இடையே மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ரூ.2 கோடியில் பாலம்

கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இதில் தெப்பக்காடு பகுதியில் மாயாறு ஓடுகிறது. இதன் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் பாலம் கட்டப்பட்டது. நாளடைவில் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலை காணப்பட்டது. இதனால் புதிய பாலம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு புதிய பாலம் கட்ட சி.ஆர்.ஐ.டி.பி. திட்டதில் ரூ.1 கோடியே 99 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் பழைய பாலம் உடைத்து அகற்றப்பட்டது. தொடர்ந்து புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது. பின்னர் கொரோனா காலம் மற்றும் தொடர் கனமழை உள்ளிட்ட காரணங்களால் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இயல்புநிலை திரும்பிய பின்னரும் பாலம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

ஆமை வேகத்தில் நடக்கிறது

இதனால் வனத்துறைக்கு சொந்தமான தரைபாலத்தில் தற்காலிகமாக வாகன போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பாலமும் சேதம் அடைந்து வருகிறது. இதனால் மாயாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

மசினகுடி ஊராட்சி மக்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக முதுமலை வழியாக கூடலூர் சென்று வருகின்றனர். தற்போது பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர சுற்றுலா பயணிகளும் தெப்பக்காடு முகாமுக்கு வெகு தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆண்டு முழுவதும் மாயாற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பாலம் கட்டுமான பணியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story