வெள்ளநீர் புகுந்ததில் செங்கல் சூளைகள், பருத்தி வயல்கள் நாசம்
வெள்ளநீர் புகுந்ததில் செங்கல் சூளைகள், பருத்தி வயல்கள் நாசமானது.
தா.பழூர்:
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லணை மற்றும் முக்கொம்பு ஆகிய அணைகள் வழியாக காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளமாக பாய்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தா.பழூரை ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்களான அடிக்காமலை, மேலகுடிக்காடு, தென்கச்சிபெருமாள்நத்தம், கீழகுடிக்காடு, அண்ணங்காரம்பேட்டை, கோடாலிக்கருப்பூர் ஆகிய கிராமங்களில் ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக செங்கல் சூளைகளில் தொழிலாளிகள் களிமண்ணை கொண்டு செங்கல் உற்பத்தி செய்து வந்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் சூளையில் எரியூட்டுவதற்கு தயாரான நிலையில், செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டன.
செங்கல்-பருத்தி நாசம்
ஆனால் எதிர்பாராதவிதமாக கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள செங்கல் சூளைகள் தண்ணீரில் மூழ்கின. ஒவ்வொரு சூளையிலும் சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் மதிப்பிலான செங்கற்கள் எரியூட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. இதனால் செங்கல் சூளை உரிமையாளர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
கோடாலிக்கருப்பூர் அருகே பூவோடை கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் பகுதியில் அமைந்துள்ள மதகுகள் சரியாக இல்லாததால், அந்த மதகுகள் வழியாக கொள்ளிடம் ஆற்று நீர் பூவோடைக்குள் புகுந்து அருகில் உள்ள பருத்தி வயல்களில் வெள்ளம் சூழ்ந்ததால், நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி வயல்கள் நீரில் மூழ்கின. நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த பருத்தி முற்றிலும் சேதம் அடைந்ததால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
மதகை சீரமைக்க வேண்டும்
பூவோடையில் இருந்து தண்ணீர் திறக்கும் மதகு சரியாக இருந்திருந்தால் கொள்ளிடம் ஆற்று வெள்ளநீர் பூவோடைக்குள் புகுந்து இருக்காது என்றும், எனவே உடனடியாக மதகை சீரமைத்து எதிர்காலத்தில் இது போன்ற சூழ்நிலை ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.