செங்கல் சூளை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் குவாரியில் மண் அள்ள மறுப்பதாக கூறி செங்கல் சூளை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல் சூளைகள்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியப்பபிள்ளைபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளுக்கு தேவையான மண் அதே பகுதியில் செயல்படும் அரசு குவாரியில் இருந்து வாங்கப்பட்டு வந்தது. மேலும் அந்த மண்ணை செங்கல் சூளைகளில் இருந்தே டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களை கொண்டு அள்ளி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக குவாரி உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திலேயே செங்கல் சூளைகளுக்கு மண் வழங்குவதாகவும், அதற்கான வாடகையை கொடுத்து விடும்படியும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் செங்கல் சூளை உரிமையாளர்கள் தங்களிடமே டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்கள் உள்ளதால் எங்கள் வாகனத்திலேயே மண் அள்ளி கொள்வதாகவும், அரசு நிர்ணயித்த விலையை வழங்குவதாகவும் கூறினர்.
போராட்டம்
இதற்கு குவாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மண்ணை விற்பனை செய்ததாக தெரிகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன், குப்பாம்பட்டி விலக்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்து டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் தாலுகா அலுவலகம் சென்று மனு கொடுக்கவும் முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் மற்றும் ஆண்டிப்பட்டி தாசில்தார் திருமுருகன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர், தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் ஆண்டிப்பட்டி தாசில்தார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) மண் குவாரி உரிமையாளர்கள், செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக முடிவு எடுக்கப்படும் என்றனர்.
இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். குவாரியில் மண் அள்ள மறுப்பதாக கூறி தாலுகா அலுவலகம் முன்பு செங்கல் சூளை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.