நெல்லிக்குப்பம் அருகே கணவரை இழந்த பெண்ணுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கிராம உதவியாளர் சிக்கினார்


நெல்லிக்குப்பம் அருகே  கணவரை இழந்த பெண்ணுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்  கிராம உதவியாளர் சிக்கினார்
x

நெல்லிக்குப்பம் அருகே கணவரை இழந்த பெண்ணுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் போலீசில் சிக்கினார்.

கடலூர்


நெல்லிக்குப்பம்,


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பாதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவருடைய கணவர் சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதையடுத்து, ஜெயலட்சுமி வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு சான்றிதழ் கொடுக்காமல் நீண்ட நாட்களாக அதிகாரிகள் காலம் தாழ்த்தியுள்ளனர்.

இதையடுத்து, ஜெயலட்சுமியின் சகோதரர் ரவி, மேல்பாதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்தவர்களிடம் சான்றிதழின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

லஞ்சம் தந்தால் தான் சான்றிதழ்

அப்போது, கிராம உதவியாளர் பாட்ஷா என்கிற முஜிப்பூர் ரகுமான் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக வாரிசு சான்றிதழ் வழங்குவதாக கூறியுள்ளார். மேலும் பணம் கொடுக்காவிட்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் வாரிசு சான்றிதழ் வாங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து ரவி, கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை ரவியிடம் கொடுத்து அனுப்பினர்.

போலீசில் சிக்கினார்

அதன்பேரில் ரவி, நேற்று மதியம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு எதிரே சென்று, பாட்ஷாவிடம் ரூ.3 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை அவர் பெற்றுக்கொண்ட போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் பாட்ஷாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து பாட்ஷாவை கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story