நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
பாளையங்கோட்டையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் சபாநாயகர்-அமைச்சர் பங்கேற்றனர்.
பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையத்தில் சர்வ சமய கூட்டமைப்பு சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. முஸ்லிம் அனாதை நிலைய தலைவர் எம்.கே.எம்.முகமது கபீர் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.கே.எம்.முகமது ஷாபி வரவேற்று பேசினார். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
சபாநாயகர் அப்பாவு பேசுகையில், பிறருக்கு உதவி செய்வது எப்படி என்பதை முஸ்லிம் சமுதாயத்தை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க.விற்கு இந்த சமுதாயம் எப்பொழுதும் உறுதுணையாக இருந்துள்ளது. இந்த சமுதாயத்திற்கும் தி.மு.க. எப்பொழுதும் உறுதுணையாக இருந்து வருகிறது. கொரோனா காலத்தில் முஸ்லிம் இளைஞர்கள் நெல்லை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்துள்ளனர். அப்படி மனிதாபிமானத்துடன் செயல்பட்ட உங்களைப் பாராட்டுகிறேன். உங்களுடைய கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறி நிச்சயம் நிறைவேற்றப்படும், என்றார்.
நிகழ்ச்சியில் மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, சர்வ சமய கூட்டமைப்பு தலைவர் சிதம்பரம், நெல்லை சந்திப்பு பள்ளிவாசல் தலைவர் நியமத்துல்லா, சேரன்மாதேவி சேகரகுரு கிப்ட்சன், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.